பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்(New)

கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 19          பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்      எபே 4:1-32

“அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற

தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” (எபே 4:30).

      நம்முடைய வாழ்க்கையில் தேவ ஆவியானவரை துக்கப்படுத்துகிறோமா? இன்னுமாக பவுல் 1 தெச 5:19 –ல், “ஆவியை அவித்துப்போடாதிருங்கள்” என்று சொல்லுகிறார். ஆகவே நாம் நம்முடைய வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தக்கூடிய காரியங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. எவைகள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும்?

     பவுல் எபே 4:31 –ல் “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது” என்று சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் உண்டா? கோபங்கள் உண்டா? மூர்க்கத்தனம் உண்டா? அவைகளை விட்டு விலகு. அவைகள் உன்னில் இருக்குமானால், பரிசுத்த ஆவியானவரைத்  துக்கப்படுத்துகிறாய். தேவனுடைய அன்பை விட்டு விலகிச் செல்லுகிறாய். மன்னிக்க முடியாத சுபாவம் உன்னில் காணப்படுமேயானால், அவையும் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும் செயலே. எபே 4:31 –ல் “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று பவுல் சொல்லுகிறார்.

      இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பாவங்களை மன்னித்திருக்கிறார். எவ்வளோ பெரிய துரோகங்களை நமக்கு அவர் மன்னித்திருக்கிறார். ஆனால் நாம் மற்றவர்களை மன்னிப்பதில்லை. இவ்விதமான குணங்கள் பரிசுத்த ஆவியானவரைத்  துக்கப்படுத்துகிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமான காரியங்களை களைந்து போடுவோம். தேவனுடைய பரிசுத்த சிந்தையை கொண்டவர்களாக வாழுவோம். அது நமக்கு பிரயோஜனமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால், நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் இருப்பது அவருடைய இரட்சிப்பின் நிச்சயம். பவுல் இன்னுமாக, “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்” (1:13) என்று சொல்லுகிறார். பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தக்கூடிய ஒரு காரியமும் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடாது.

You may also like...

Leave a Reply