கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 4                                    கர்த்தரின் நடத்துதல்                     ஏசாயா 30:1-21 

“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்:

வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப்

பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21).

       நம்முடைய வாழ்க்கையில் வலது பக்கமாக சாய்ந்தாலும் சரி, இடது பக்கமாக சாய்ந்தாலும் சரி கர்த்தர் நம்மிடத்தில் பேசுகிறவராகவே இருக்கிறார். தேவனை நாம் சார்ந்து வாழும்பொழுது அது எந்தப்பக்கமாக இருந்தாலும், கர்த்தர் நம்மோடுகூட பேசி நம்மை வழிநடத்துகிறார் என்பதை நாம் நம்பலாம். “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா 42:16) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

       இருளை வெளிச்சமாக மாற்றுகிறவர் கர்த்தர். உன்னுடைய வாழ்க்கை இருண்ட நிலையில் காணப்படுமானால், இன்றைக்கு கர்த்தர் உன் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கட்டளையிடுவார். கோணலாக உன் வாழ்க்கை காணப்படுமானால், அதனை செயவையாக்குகிறவர் கர்த்தர். மேலும் தேவன் சொல்லுகிறார் நான் அவர்களை கைவிடாதிருப்பேன். அன்பானவர்களே! நம்மை கைவிடுகிற தேவன் அவரல்ல. இன்னுமாக ஏசாயா 48:17 –ல் “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று சொல்லுகிறார். ஆகவே நமக்கு எது பிரயோஜனமான காரியங்களோ, அதை கர்த்தர் போதிக்கிறவராகவே இருக்கிறார். அதுமட்டும்மல்ல நாம் நடக்க வேண்டிய வழிகளில் நடத்துகிற தேவன் அவர். கர்த்தரை சார்ந்துகொள். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவரை பற்றிக்கொள்.

      இன்னுமாக தேவன் “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசாயா 58:11) என்று சொல்லுகிறார். கர்த்தர் நல்லவர். உன்னுடைய வாழ்க்கையில் நிச்சமாக இவ்விதம் செய்வார் என்பதை நம்பு. அவர் ஒருக்காலும் உன்னை கைவிடமாட்டார். அவரை விட்டு விலகாதே. அவரையே சார்ந்துகொள்.