கர்த்தர்க்குப் பயப்படும் பயம்

கிருபை சத்திய தினதியானம்

அக்டோபர் 27        கர்த்தர்க்குப் பயப்படும் பயம்        ஏசாயா 33:1–24

      “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய

உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே

அதின் பொக்கிஷம்” (ஏசாயா 33:6).

        நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரில் உறுதியாக நிற்கவில்லை என்றால், நம் வாழ்க்கையில் நாம் நிலை தவறினவர்களாகவும், தடுமாறித் திரிகிறவர்களாகவும் காணப்படுவோம். இந்த அதிகாரத்தில் ஏசாயா மூன்று காரியங்களை முக்கியத்துவப் படுத்துகிறார். முதலாவது, பூரண இரட்சிப்பு. நம் வாழ்க்கையில் நாம் இரட்சிக்கப்படவில்லை என்றால், நம் வாழ்க்கை அதிபயங்கரத்தில் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இரட்சிக்கப்படும் பொழுது நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தேவன் பொறுப்பெடுத்து செயல்படுகிறவராக இருக்கிறார். இரட்சிக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கையானது கர்த்தருக்குள் பாதுகாப்பானதாகும். இரட்சிக்கப்படாத மனிதனின் வாழ்க்கையானது பாதுகாப்பற்ற, நம்பிக்கையற்ற, ஏமாற்றம் நிறைந்த ஒன்றாகும்.

        இரண்டவாதாக, தேவன் கொடுக்கிற ஞானம். தேவ ஞானம் என்பது தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற ஆவிக்குரிய காரியங்கள் ஆகும். அது உன்னதமான சில்லாக்கியங்கள் கொண்டவை. தேவனுடைய காரியங்களை ஒரு மனிதன் தாமாக அறிந்துக்கொள்ள முடியாது. அதற்கு தேவனுடைய ஞானம் அவசியம். மூன்றாவதாக, அறிவு. இது தேவனைக் குறித்து நாம் அறிந்திருக்கிற காரியமாகும். தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழுவதாகும். இந்த மூன்று காரியங்களும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும். இந்த மூன்று காரியங்களும் இல்லாதவர்களின் வாழ்க்கை நிலையற்றதே.

       அதுமாத்திரமல்ல, நம் வாழ்க்கையில் பெற்றிருக்கிற அல்லது பெறவேண்டிய பொக்கிஷம் என்னவென்றால் கர்த்தருக்குப் பயப்படும் பயம். தேவனுக்குப் பயந்து வாழுகிற வாழ்க்கை. ஆகவேதான் வேதம்: “கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்”(நீதி 14:27) என்று சொல்லுகிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது நாம் அடிமைத்தனத்தில் வாழுவதல்ல. மாறாக நாம் நீதியின் பாதையில் செல்லுவதற்கு கர்த்தர்க்குப் பயப்படும் பயம் அவசியம். நாம் கர்த்தருக்குப் பயப்படும் பொழுது மாத்திரமே மேலே கூறிய மூன்று காரியங்களையும்  பெற்றுக் கொள்ளமுடியும். ஆகவே கர்த்தர்க்குப் பயப்படும் பயம் உன்னில் காணப்படுகிறதா?

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.