கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர்: 29         பொய்யான மாயை       யோனா 2:10

 “பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள்

தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்” (யோனா 2:8)

 

    இந்த உலகத்தில் எல்லோருக்கும் தேவனுடைய மெய்யான சத்தியத்தை கேட்கும்படியான தருணம் கிடைப்பதில்லை. சொல்லப்போனால் சத்தியத்தை கேட்கும்படியான வாய்ப்பே  இல்லாத அநேகர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைக் குறித்து இங்குச் சொல்லப்படவில்லை. அப்படியானால் யாரைக் குறித்து இங்குச் சொல்லப்படுகிறது? தங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய சத்தியத்தை தெளிவாய் கேட்கிறவர்கள் இவர்கள். தேவனைப் பற்றிக்கொள்ளும்படியான வெளிச்சத்தைக் குறித்து அதிகம் தெரிந்தவர்கள். அவர்களுக்கு முன்பாக தேவனுடைய மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய கீழ்ப்படிதல், விசுவாசம் மற்றும் சாட்சி போன்றவற்றை காண்கிறவர்கள். வேதாகமம் அவர்கள் கையில் இருக்கிறது. தேவ பிள்ளைகளின் ஐக்கியம் பெற அருமையான வாய்ப்பு இருக்கிறது. சபை கூட்டங்கள் மற்றும் ஆவிக்குரிய வழிகளில் வளர்வதற்காண தருணங்களும், வாய்ப்புகளும் பெற்றவர்கள். இன்னும் பலவிதமான ஆவிக்குரிய சிலாக்கியங்களை தங்களுடைய வாழ்க்கையில் பெற்றவர்கள்.

    இவ்விதமான அநேக ஆவிக்குரிய நன்மைகளை பெற்றும் அவைகளை அலட்சிய படுத்தும் போதும், அவைகளை உயர்வாக எண்ணிக் கொள்ளாத போதும் தேவன் தங்களுக்குக் கொடுக்கும் கிருபையின் சிலாக்கியங்களைப் போக்கடிக்கிறவர்கள், அதாவது வீணடிக்கிறவர்கள்.

    இவ்விதமான மக்கள் இரண்டு விதமான காரியங்களைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். (1) பொய்யானது (2) மாயையானது. அதாவது அவர்கள் எதை மேன்மையாக உயர்வாக கருதுகிறார்களோ அவைகள் பொய்யானவைகள். அவர்கள் உலகமும் அதின் காரியங்களும் தங்களுக்கு மேன்மையை தரும் என்று எண்ணுகிறார்கள். அது ஒரு போதும் தராது. இரண்டாவதாக, அது மாயையானது. அது வெறுமையான தோற்றத்தைக் கொண்டிருக்குமே ஒழிய அது நிலையானது அல்ல. உன் நிலை என்ன?