டிசம்பர் 22                                          பொய்யான மகிழ்ச்சி                            ஓசியா 9 : 1 -10

இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே, மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனை விட்டு நீ சோரம்போனாய்.’ (ஓசியா 9 : 1)

            தேவனுடைய மக்கள் மெய்தேவனைவிட்டு வழிவிலகிப் போனபோது, அந்த மக்களை தேவன் இவ்விதம் அழைக்கிறார். அவர்களுடைய நன்மைக்காகவே அவர்களை மனந்திரும்பும்படி அழைக்கிறார். ஒருவேளை நீயும் இந்த இஸ்ரவேல் மக்களைப்போல, தூரம் போன நிலைமையில் இருக்கலாம். ஆனாலும் தேவன் நீ அழிந்துபோவதை விரும்பாதவராக, உன்னை நேசிக்கிறதினிமித்தம் இவ்விதமாக உன்னை அழைக்கிறார். அவருக்குச் செவிகொடு.

            இந்த மக்கள் மகிழ்சியாயிருக்கிறார்கள் ஆனால் இது எவ்விதமான மகிழ்ச்சி? இது தேவனுடைய மகிழ்ச்சியல்ல. ‘கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்’ என்று சொல்லும்படியான  மகிழ்ச்சியல்ல. இது நிலையான மகிழ்ச்சியல்ல, இது கொஞ்சகால மகிழ்ச்சியே. தேவன் இஸ்ரவேல் மக்களின் மகிழ்ச்சியை எவ்விதம் ஓயப்பண்ணுவேன் என்று சொல்லுகிறார்?கேளுங்கள், ‘நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும் மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன், தேசம் பாழாகும்’ (எரே 7 : 34)

            நீ இவ்விலக மக்களின் மகிழ்ச்சியை தேடாதே. அது உன் ஆத்துமாவுக்குக் கண்ணியாயிருக்கும். கர்த்தர் சொல்லுகிறார், நீ தேவனை விட்டு தூரப் போயிருக்கிறாய்’. அன்பானவர்களே! தேவனை விட்டுத் தூரமாய் விலகியிருக்கும் வாழ்க்கையில் ஒருபோதும் மகிழ்ச்சியைத் தேடாதே. அதைக்குறித்து துக்கப்படு. ஆதாம் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டான். ‘அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்’ (ஆதி 3 : 9). ஆதாமும், ஏவாளும் தங்கள் நிர்வாணங்களை மறைக்க அத்தியிலைகளைத் தைத்து உபயோகப்படுத்தினார்கள். அருமையானவர்களே! தேவன் தோல் உடைகளை அவர்களுக்குக் கொடுத்தார். மிருகத்தைக் கொன்று இந்த பாதுகாப்பின் வஸ்திரத்தைக் கொடுத்தார். தேவன் நமது ஆவிக்குரிய நிர்வாணத்தை  மறைக்க தன் சொந்தக் குமாரனைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.