பயப்படாதே

கிருபை சத்திய தின தியானம்

ஜனவரி 1                             பயப்படாதே                      மத் 8:26-34

      “அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி;

எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்.

உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று” (மத் 8:26)

      ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களோடு கூட படகில் பிரயாணப்பட்ட பொழுது, படவு கவிழத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று என்று பார்க்கிறோம். ஆனால் அவரோ நித்திரையாய் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எவ்விதம் நித்திரையாக இருக்க முடிந்தது? ஏனென்று கேட்டால் அவர் சர்வத்தையும் திட்டமிட்ட படியால், அவர் மனிதர்களைப் போல பயப்படக் கூடியவராக இல்லை. ஆகவே அவர் அமைதியாக நித்திரையாக இருந்தார்.

      இந்த வேளையில் சீஷர்கள் இயேசுவை நோக்கி ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்து போகிறோம் என்றார்கள். அதற்கு அவர் அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்டார். மத்தேயு 6:30 -ல் “அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று சொல்லுகிறார். அருமையானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் பயப்பட வேண்டியதில்லை, கலங்க வேண்டியதில்லை. அவர் நம்முடைய தேவைகளை அறிந்தவராக இருக்கிறபடியால், நிச்சயமாக நம்முடைய காரியங்களை அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

      இந்த சீஷர்கள் அவிசுவாசத்தினால் பயந்தார்கள். அவிசுவாசம் எங்குள்ளதோ அங்கு பயம் இருக்கும். ஆகவே தான் ஏசாயா 41:10- ல் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று சொல்லுகிறார். அன்பானவர்களே! தேவன் நம்முடனே கூட இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இன்னுமாக தேவன் “யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்” (ஏசாயா 41:14) என்று சொல்லியிருக்கிறார். கர்த்தர் எப்பொழுதும் நம்மை வழிநடத்த வல்லவராகவே இருக்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.