பயப்படாதே (New)

கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 9                                    பயப்படாதே                       2 இராஜா 6:1-17

“அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும்

நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்”(2 இராஜா 6:16).

   தேவனுடைய மனிதனாகிய எலிசா அவனுடைய வேலைக்காரனைப் பார்த்து இவ்விதமாக சொல்லுவதை நாம் பார்க்கிறோம். மெய்யாலுமே தேவனுடைய பிள்ளைகளைச் சுற்றிலும் தேவனுடைய சேனை எப்பொழுதும் சூழ்ந்துள்ளதாகவே இருக்கிறது. பயப்படவேண்டிய அவசியமே கிடையாது. ஆகவேதான் தாவீது இராஜா, “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்” (சங் 3:6) என்று சொல்லுவதைப் பார்க்கிறோம்.

      ஆகவே ஒரு கிறிஸ்தவன் மனிதர்களைக் குறித்து பயப்படவேண்டிய அவசியமே கிடையாது. இன்னுமாக “எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்” (சங் 27:3) என்று சொல்லுவதைப் பார்க்கலாம். ஏனென்றால் தேவன் அவனுடைய நம்பிக்கையாக இருப்பதின் காரணமாக, ஒருக்காலும் தேவன் அவனை கைவிடமாட்டார் என்கிற நம்பிக்கையை கொண்டுள்ளான். இதுவே இந்த கிறிஸ்துவ வாழ்க்கையினுடைய மெய்யான ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும்.

      கர்த்தர் இன்னுமாக, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 43:10) என்று சொல்லுகிறார். இந்த தேவன் அவ்விதமாக நம்மை தாங்கும்படியான தேவன். உனக்கு எதிரிடையாய் அநேகர் செயல்படலாம். ஆனாலும் பயப்படாதே. இன்னுமாக “உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்” (ஏசாயா 41:12) என்று சொல்லுகிறார். ஆகவே தேவன் நம்பட்சமாக இருக்கும்பொழுது நாம் பயப்படவேண்டிய அவசியமேயில்லை. மேலும் “யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்” (ஏசாயா 43:14) என்று உன் இரட்சகர் இவ்விதமாக சொல்லும்பொழுது நீ பயப்படவேண்டிய அவசியமில்லை.

You may also like...

Leave a Reply