கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 8        நீதிமானின் வாசஸ்தலம்   நீதி   3 : 23 –33

“நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்” (நீதி 3:33)

    இந்த வாசஸ்தலம் பெரிய மாளிகையா அல்லது எளிய குடிசையா என்பதல்ல, தேவன் அதைப்பார்த்து ஆசீர்வதிப்பதில்லை. அதில் வாசம்பண்ணுகிறவர்களைப் பொறுத்தே அந்த ஆசீர்வாதம் உண்டு. ஒரு குடும்பத்தில் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ தேவனை அறிந்தவர்களாய் இருந்தால், அந்த வீட்டில் ஆசீர்வாதம் உண்டு. ஒருவர் தேவனை அறிந்திருந்தாலும் தேவன் அதற்கேற்ற ஆசீர்வாதத்தை அங்கு கட்டளையிடுகிறார். கணவனும் மனைவியும் தேவனை அறிந்திருந்தால் நிச்சயமாக அங்கு பெருத்த தேவனுடைய ஆசீர்வாதம் உண்டு. ஏனென்றால் பிள்ளைகள் தேவனுடைய சத்தியத்திற்குள் அதின் மூலமாக வளருவார்கள்.

    இந்த வீட்டில் குடும்ப ஜெபமுண்டு, தேவனை நோக்கி ஜெபிக்கிறவர்கள் உண்டு, தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவமும், கனமும் உண்டு. ஆகவே தேவனுக்கேற்ற காரியங்களில் வளரும்படியான காரியங்கள் இருப்பதால் இந்த வீடு தேவனின் ஒரு பாடசாலையாகவே இருக்கிறது. தேவனுக்கேற்ற பயம் இங்கு போதிக்கப்படுகிறது. தேவனை முதலாவதாக வைப்பதும், தேவனுடைய வார்த்தையின்படியாக காரியங்களை நம்புவதும், தேவனுடைய சித்தமறிந்து ஒவ்வொன்றும் செய்யப்படுவதும் உள்ள இந்த வாசஸ்தலத்தை கர்த்தருடைய கிருபை சூழ்ந்துகொள்ளும். தேவனுடைய மெய் ஆசீர்வாதம் இந்த ஸ்தலத்தில் குடிகொண்டிருக்கும். கர்த்தர் அந்த வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பையும், வீட்டில் அவருடைய இனிய பிரசன்னத்தையும் வைத்திருப்பார். அங்கே அவருக்கு ஸ்தோத்திரபலிகள் ஏறெடுக்கப்படும். தேவனைத் துதிக்கும் சங்கீதங்களும், கீர்த்தனைகளும், பாடல்களும் தொனிக்கும். கர்த்தருடைய பணிக்கேதுவான காரியங்களும் அங்கு காணப்படும். அந்தக் குடும்பத்தின் பிள்ளைகள் தேவ ஊழியர்களாக, மிஷினரிகளாக எழும்ப அந்த வீடு பயிற்சி ஸ்தலமாக இருக்கும்.

    அன்பானவர்களே! உங்கள் வீடு இவ்விதம் இருக்கிறதா? இவ்விதம் இருக்க வாஞ்சிக்கிறீர்களா? தேவன் அவ்விதமாகவே ஆசீவதித்து உங்களை வழிநடத்துவார்.