ஜூலை 17        நம்மைச்சுத்திகரிப்பார்      1 யோவான் 1 : 1—10

‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய்யிருக்கிறார்’ (1 யோவான் 1 : 9)
இந்த நிருபத்தை அப்போஸ்தலனாகிய யோவான் அவிசுவாசிகளுக்கு அல்ல, சபை மக்களுக்கு எழுதுகிறார். ஒரு கிறிஸ்தவன் பாவமே செய்யமாட்டானா? இல்லை, அவன் பாவம் செய்ய வாய்புண்டு. ஆனால் அவன் அதில் நிலைத்திருக்கமாட்டான். அவன் பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டவன், ஆனாலும் தவறும் வாய்ப்பு அவனில் உண்டு என்பதை நாம் அறியவேண்டும். அப்படி அவன் பாவம் செய்தானானால் அவன் செய்யவேண்டியதைக் குறித்து இங்கு எழுதப்படுகிறது. முதலாவது அவன் அதை தேவனுக்கு முன்பாக ஒத்துக்கொள்ளவேண்டும். பாவத்தை மறைப்பதில் அல்ல அதை ஒத்துக்கொள்வதில்தான் பரிகாரம் இருக்கிறது. ‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ (நீதி 28 : 13)
அறிக்கை செய்வதே நம்முடைய வேலை. ஒத்துக்கொள்வதை நம்முடைய காரியம். ஆனல் அதை செய்ய மறுப்பவன் அவன் வாழ்வில் எவ்வளவு பெரிய இழப்புக்கு உள்ளாகிறான். பாவத்தை அறிக்கை செயாதமட்டும் தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவில் பாதிப்பு ஏற்ப்படுகிறது. அவன் மனசாட்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அறிக்கையிட்டால் தேவன் எல்லா அநியாயத்தையும் நீக்குகிறார். நம்மை சுத்திகரிக்கிறார். ‘என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன்.’ ( 2 நாளா 7 : 14)
ஒரு கிறிஸ்தவன் எப்போதும் தன்னை தாழ்த்தவும், தவறு செய்யும்போது மனந்திரும்பவும் ஆயத்தமுள்ளவனாய் இருக்கவேண்டும். தேவனோடே ஒபுரவாக்கப்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருக்கவேண்டும். இந்த நாட்க்களில் உனக்கும் தேவனுக்கும் உள்ள உறவு எப்படியிருக்கிறது என்பதை சிந்தித்துபார்.