கலியான வஸ்திரம் மத்தேயு 22:1–14

ஜூலை :12

‘சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்’ (மத், 22 : 12)

 

ராஜாவின் கலியாணம் இது. அழைக்கப்பட்ட அநேகர் வர மறுத்துவிட்டார்கள். ஆகவே வழிசந்திகளில் சென்று அங்கு காணப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அப்பொழுது கலியாண சாலை விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா பிரவேசித்தார். கலியாணவஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு ‘சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்  என்று ராஜா கேட்டான்.’ இந்த கலியாண வஸ்திரத்தின் விசேஷம் என்ன?

 

அந்த நாட்க்களில் இவ்விதமான பெரிய ராஜாக்களின் கலியாணத்திற்கு வருகிற ஒவ்வொருவருக்கும் அவர்கள் கலியாண சாலைக்குள் நுழைவதற்க்கு முன்பாக இலவசமாக இந்த கலியாண வஸ்த்திரம்கொடுக்கப்படும், அதை அணிந்துக்கொண்டுதான் அவர்கள் உள்ளே செல்லவேண்டும். இந்த ராஜாவின் கலியாணவிருந்தில் பங்கேற்ற மக்கள், வழியோரங்களில் காணப்பட்ட எளியமக்கள், வறியவர்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மிகவும் அற்பமானவைகளும், கிழிந்தவைகளுமாயிருந்திருக்கும். ராஜா கொடுத்த வஸ்திரமோ மிகவும் விலை மதிப்பான உயர்ந்த வஸ்திரம். ஆனால் அதில் ஒரு மனிதன் இந்த வஸ்திரத்தை வாங்க மறுத்துவிட்டான். அதை அணிய மறுத்துவிட்டான் இது எதை காண்பிக்கிறது? அவனுடைய வஸ்திரமே அவனுக்குப் போதுமென்று எண்ணியிருப்பான். அவன் ராஜா கொடுத்த இலவசமான வஸ்திரத்தை பெறவிரும்பவில்லை அந்த மனிதனின் முடிவுஎன்னவாயிற்று? அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடப்பட்டான் அன்பானவர்களே! இந்த கலியாணவஸ்திரம் எதைக்குறிக்கிறது? தேவன் இலவசமாக கொடுக்கும் இரட்சிப்பட், இரட்சிப்பின் வஸ்திரத்தைகுறிக்கிறது (ஏசாயா, 61 : 10) உனக்கு இந்த இரட்சிப்பின் வஸ்திரம் உண்டா? நீ கிறிஸ்தவ பெயரைக் கொண்டிருக்கலாம். ஆலையத்தில் அங்கத்தினராகவும் இருக்கலாம். ஆனால் இரட்சிப்பின் வஸ்த்திரம் இல்லாவிட்டால் ராஜாவின் பந்தியில், பரலோகராஜ்யத்தில் உனக்கு இடமில்லை. இந்த வஸ்திரத்தைப் பெற்றுக்கொள்.