அக்டோபர் 21                               இயேசுவின்  ஜீவன் வெளிப்படுத்தல்                    2 கொரிந்தியர் 4 : 1 -11

‘சாவுக்கினமான எங்கள் மாம்சத்தில் இயேசுவினுடைய ஜீவன்  விளங்கும்படி’  

(2 கொரிந் 4 : 11)

அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் மாம்சத்தைக் கவனித்துக் கொள்வதில் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் அந்த அளவுக்கு தங்கள் ஆத்துமாவுக்கு, முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்பதுதான் கேள்வி. இல்லை! அநேகர் அவ்விதம் கொடுப்பதில்லை. அருமையான சகோதரனே! சகோதரியே! சிந்தித்துப்பார்.

மாம்சமெல்லாம் புல்லைப்போலவும் மனுஷனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும்மிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. ( 1பேதுரு 1 : 24 ) நாம் எவ்வளவுதான் அழகுப்படுத்தினாலும், மேன்மைப்படுத்தினாலும் அதன் முடிவு அவ்வளவுதான். இன்றைக்கு அநேகர் அதற்கு அதிகமான காலங்களையும், நேரங்களையும் செலவிடுகிறார்கள். ஆனால் ஆவிக்குறிய காரியங்களுக்கோ நேரம் கொடுப்பதில்லை.

பவுல் இங்கு தங்களின் சாவுக்கினமான இந்த சரீரத்தில் இயேசுவின் ஜீவன் விளங்குவதைப் குறித்து பேசுகிறார். இந்த சரீரம் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆத்துமாவின் பெட்டகமாகதான் இருக்கிறது. பெட்டகம் பிரதானமானது அல்ல. அதில் வாசம் செய்யும் ஆத்துமாதான் பிரதானமானது. ஆத்துமாவை புரக்கணித்து வெறும் பெட்டகத்தை நேசித்து அழகுப்படுத்துவதில் பிரயோஜனமில்லை. அது சரியான ஆகாரம் இல்லாமல் பெலனற்று, முற்றிலும் மெலிந்துபோன நடைபிணமாய் இருக்கிறது. பசியினால் கண் குழிவிழுந்து எலும்பும் தோலுமாய் இருக்கிற மனிதன் ஒரு பெரிய அழகான பிரமாண்டமான மாளிகையில் வாழ்பவனை போல இருக்கிறது. வெளியே பிரமாண்டம் உள்ளே வெறுமை. அருமையானவர்களே! உங்கள் ஆத்துமா எப்படியிருக்கிறது? உள்ளான மனுஷன் உன்னில் பெலப்படவேண்டும். அது அநேகருக்கு ஆசிர்வாதமாயிருக்கும்.